சென்னை: எம்பிபிஎஸ், பல் மருத்துவம், சித்தா, ஆயுர் வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ், பல் மருத்துவம், சித்தா, ஆயுர் வேதா மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறக்கூடிய மாணவ-மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்கு மாணவ-மாணவிகள் தயாராகி வருகிறார்கள்.
எம்பிபிஎஸ், மருத்துவ படிப்பை தனியார் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை செலவிடும் நிலை உள்ளது. ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 25 ஆயிரம் மட்டுமே ஆண்டுக்கு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு எழுதுவதில் மாணவ-மாணவிகள் அதிகம் ஆர்வம் காட்டி
வருகிறார்கள். இந்தாண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் இத்தேர்வினை 28 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் இத்தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்(அனுமதி சீட்டு) இன்று வெளியிடப்படுகிறது. neet.nta.nic.in இணையதளத்தில் வெளியிடப்படும் நுழைவுச் சீட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுச்சீட்டில் தேர்வர்களின் பெயர், மையத்தின் முழு முகவரி போன்ற விவரங்கள் இடம்பெறும். நீட் தேர்வு 3 மணி நேரம் நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இத்தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் சிரமம் இல்லாமல் எழுதுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையம் எந்தப் பகுதியில் அமைகிறது என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு மாணவர்கள் மையங்களுக்கு முன்னரே செல்வதற்கு திட்டமிட வேண்டி உள்ளது. அதனால் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சிலருக்கு மையங்கள் தூரமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே நுழைவுச்சீட்டு இன்று வெளியிடப்பட்ட பிறகு தான் தங்களுக்கு எந்த மையங்கள் எவ்வளவு தூரம் என்ற தகவலை அறிந்து கொள்ள முடியும். அதற்கேற்றவாறு தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே செல்ல திட்டமிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
