×

சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை காரில் எடுத்து செல்ல எதிர்ப்பு: திமுகவினர், கிராம மக்கள் மறியல்

சென்னை: திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சொரக்காய்பேட்டை பகுதியில் 3 வாக்குச்சாவடி மையங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்ற வாக்காளர்கள் அனைவரும் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு முழுமை பெற்றதும் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாடு கருவிகளுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

வழக்கமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் கொண்டு செல்வதற்கு பதிலாக, காரில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜி.ரவீந்திரா தலைமையில் பெண்கள் உட்பட ‌கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காரை சிறைப்பிடித்து வாக்குச்சாவடி மையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாரதி மற்றும் தேர்தல் அலுவலர்கள் சொரக்காய்பேட்டை வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நள்ளிரவு நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை காரில் எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களுடன் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாரதி, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, லாரி மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு திரும்பி சென்றனர்.

Tags : DMK ,Chennai ,Sorakaipettai ,Tiruttani assembly ,
× RELATED தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம்