×

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சிறையில் உள்ள ஞானசேகரனை தாக்கியதாக தாய் குற்றச்சாட்டு: உயிருக்கு உத்தரவாதம் தர வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள ஞானசேகரனை தாக்கியதாக அவரது தாய் குற்றம்சாட்டியுள்ள நிலையில் உயிருக்கு உத்தரவாதம் தர வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள ஞானசேகரனின் தாய் நிருபர்களிடம் கூறியதாவது:

அண்ணா பல்கலைக் கழகம் விஷயத்தில் அவனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் அவனுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நன்றாக தான் இருந்தான், நீதிமன்றத்திற்கு எல்லாம் கூட்டிக் கொண்டு வருவார்கள், நல்ல படியாக தான் அழைத்துக் கொண்டு போவார்கள். இந்த தேர்தல் என்னவென்று தெரியவில்லை, திடீரென்று அவனை தனியாக அறைக்கு அழைத்து சென்று லைட் எல்லாம் ஆப் செய்து அவனை அதிகமாக அடித்துள்ளார்கள், மயக்கம் போட்டு விழுந்துருக்கான், மூச்சு பேச்சு இல்லாம் போயிருக்கு.

உடனே அவனை தூக்கிக் கொண்டு வந்து ஸ்டான்லி மருத்துவமனையில் அட்மிட் பண்ணியிருக்கிறார்கள். ரொம்ப நேரமாக கண்ணை திறந்து பார்க்கவில்லை. அப்போது என்னுடைய மருமகளும், சின்ன பையனும் பார்ப்பதற்கு சென்றுள்ளனர். அவர்களிடம் ரொம்ப நேரமாக எழுந்திருக்கவே இல்லை, நீங்க கொஞ்சம் பேசிப் பாருங்கள் என்று கூறியுள்ளனர். அப்போது அவன் பேசியதும், 5 நிமிடம் கழித்து பேசியுள்ளான்.

சிறிது நேரம் வைத்திருந்த பிறகு இரவு 9 மணிக்கு சிறைக்கு அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர். கொலை மிரட்டல் விடுத்து அடித்துள்ளனர், எதற்காக அடித்தார்கள் என்று தெரியவில்லை, நான் என்ன தப்பு பண்ணேன், எதற்காக அடித்தீர்கள் என்று அவன் கேட்டுள்ளான், அதற்கு திரும்பவும் அடித்துள்ளனர். அப்போது அவன் மயக்கமடையும் நிலைக்கு சென்றுள்ளான். இதெல்லாம் எதற்காக நடந்துள்ளது என்று தெரியவில்லை. எனவே அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவனுக்கு இரண்டு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர், இதையெல்லாம் மனதில் வைத்து எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவனுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் உயிருக்கு உத்தரவாதம் தர வேண்டும். மேலும் உடல்நிலை மோசமாக தான் உள்ளது, காயங்கள் எதுவும் இல்லை. ஏற்கனவே மருத்துவமனையில் செக்கப் பண்ணியிருக்கிறார்கள், 5 நாட்களாக உணவு சாப்பிட முடியாமல் இருக்கிறான். உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் கிடையாது, என்னை எதுக்கு அடிச்சாங்க, சிறையில் இவ்வளவு நாள் இல்லாதது இப்ப மட்டும் ஏன் அடிக்கிறார்கள் என்று கேட்கிறான்.

தேர்தல் நேரத்தில் அடிக்கிறார்கள், யாராவது சொல்லிக் கொடுத்து அடிக்கிறார்களா, தேவையில்லாமல் என் மீது பழி போடுகிறார்கள் என்று கூறுகிறான். நேரடியாக அவனிடம் பேச முடியவில்லை. அவனுக்கு வலிப்பு வரும் உடம்பு ரீதியாக எந்த பிரச்னையும் இல்லை, அதிகமாக யோசனை பண்ணினால் வலிப்பு வரும், செக் பண்ணி பார்த்தால் ஒன்றும் தெரியாது. என் பையனுக்கு வலிப்பு வரும், மிரட்டினாலோ, அடித்தாலோ, ரொம்ப யோசனை பண்ணினாலே வலிப்பு வந்து விடும், வீட்டில் இருக்கும் போது கூட அப்படி வந்துள்ளது.

ராயப்பேட்டை மருத்துவமனையில் கூட ஒரு மாதம் அட்மிட் பண்ணி பார்த்துள்ளோம். மேலும் ஒரு வாரத்துக்கு முன்பு பார்த்ததுக்கும், இப்போது பார்ப்பதற்கும் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறான், அடித்ததாக அவன் போன் பண்ணி கூறினான், இருட்டு அறையில் அடைத்து வைத்து அடித்ததாக கூறினான். அதன்பிறகு போலீசாரும் எங்களை எதிர்த்து பேசினால் அடிக்க தான் செய்வோம் என்று கூறினார்கள். எதற்கு அடித்தார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு கூறினார்.

Tags : Gnanasekaran ,Anna University ,State Human Rights Commission ,Chennai ,Human Rights Commission ,
× RELATED தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம்