×

பரிகாரம் செய்யச் சென்றபோது 19 வயது நர்சை கடத்திய 45 வயது போலி சாமியார்

ஆலங்காயம்: பரிகாரம் செய்யச்சென்ற 19 வயது நர்சை கடத்திச்சென்ற போலி சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இளம்பெண்ணுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது.

இதற்காக அக்கம்பக்கத்தினர் கூறிய ஆலோசனையின்பேரில், கல்லறைபட்டி அருகே கொல்லகுப்பம் கோயிலுக்கு இளம்பெண்ணை பெற்றோர் அழைத்துச்சென்றனர். அங்கிருந்த ேபாலி சாமியாரான சுப்பிரமணி என்கிற ராமசாமி (45), இளம்பெண்ணுக்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாகவும், ஆடு, கோழி பலியிட்டால் சரியாகிவிடும் எனவும் கூறியுள்ளார். இதற்காக இளம்பெண்ணின் பெற்றோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியதாக தெரிகிறது. இருப்பினும் இளம்பெண்ணுக்கு உடல் நிலை சரியாகவில்லை. இதனால் மீண்டும் சாமியாரிடம்பெற்றோர் அணுகினர்.

அதற்கு அந்த சாமியார், ‘எனது கோயிலில் இளம்பெண் 2 வாரம் தங்கி பூஜை செய்தால் அனைத்தும் சரியாகிவிடும்’ எனக்கூறியுள்ளார். இதனை நம்பி இளம்பெண்ணை அவரது பெற்றோர், கோயிலில் விட்டுச்சென்றனர். 2 வாரங்கள் கழித்து உடல் நலம் தேறிய நிலையில் இளம்பெண் வீடு திரும்பியுள்ளார். அதன்பின்னர் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். ஆனால் அடிக்கடி இளம்பெண்ணிடம் சாமியார் போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி பணிக்கு சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை.
அப்போது இளம்பெண்ணின் பெற்றோருக்கு சாமியார் போன் செய்து, `நான் உங்கள் மகளை திருப்பதிக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்ய உள்ளேன். எனவே அவரை இனி தேடவேண்டாம்’ எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆலங்காயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் போலி சாமியார் சுப்பிரமணிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து போலி சாமியார் மற்றும் இளம்பெண்ணை தேடிவருகின்றனர்.

Tags : Alangayam ,Tirupattur district ,Vaniyambadi.… ,
× RELATED தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம்