சென்னையின் 300 முக்கிய சாலைகளில் சித்திரங்கள், குறியீடுகளுடன் புதிய வழிகாட்டி பலகைகள்: ரூ.20 கோடியில் அமைகிறது

சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தவிர்க்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை தீட்டியுள்ளது. இதன்படி, நகரின் 300 முக்கிய சாலைகளில் சித்திரங்கள் மற்றும் குறியீடுகளை அடிப்படையாக கொண்ட புதிய வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், வாகன ஓட்டிகளுக்கு தெளிவான திசைகளை காட்டுவதுடன், விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், அண்ணா சாலை, வேளச்சேரி மற்றும் பெருங்குடி போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் இந்த நவீனப் பலகைகள் முதலில் நிறுவப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தகவல் பலகைகள் வெறும் திசைகளைக் காட்டும் கருவியாக மட்டும் இருக்காது. விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்கள், பள்ளிக் குழந்தைகள் அதிகம் நடமாடும் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கடக்கும் பாதைகள் போன்றவற்றில் ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் பிரத்யேகக் குறியீடுகள் இடம்பெறும்.

வேகத்தடைகள் உள்ள இடங்களில் போதிய வெளிச்சம் அல்லது அடையாளங்கள் இல்லாததால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, சித்திர வடிவிலான குறியீடுகள் வாகன ஓட்டிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாகப் பள்ளி மண்டலங்களில் ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படும் இந்த எச்சரிக்கைப் பலகைகள், பாதுகாப்பான வாகன ஓட்டும் முறையை ஊக்குவிக்கும் என்று மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதுள்ள பலகைகளில் பெரும்பாலும் எழுத்துக்களே பிரதானமாக உள்ளன.

இதனால் தமிழை வாசிக்க தெரியாதவர்களோ அல்லது வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களோ சரியான திசையை அறிந்துகொள்வதில் சிரமம் எதிர்கொள்கின்றனர். இதனைச் சரிசெய்யும் விதமாக, எழுத்துக்களுக்குப் பதிலாகச் சித்திரங்கள் அல்லது குறியீடுகளை பயன்படுத்துவதால், மொழி தெரியாதவர்களும் எளிதில் திசைகளையும் எச்சரிக்கைகளையும் புரிந்துகொள்ள முடியும். நகரின் வளர்ந்து வரும் வாகன பெருக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, இத்தகைய எளிமையான குறியீடுகள் குழப்பத்தைக் குறைத்து சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று நகர்ப்புற திட்டமிடல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

சென்னை மாநகரத்தின் விரிவாக்கம் அடைந்த புறநகர் பகுதிகளில் சாலை கட்டமைப்பு வளர்ந்த அளவிற்கு, வழிகாட்டிப் பலகைகள் இன்னும் முறையாக அமைக்கப்படவில்லை என்ற குறையை நீண்ட நாட்களாகவே குடியிருப்புவாசிகள் முன்வைத்து வந்தனர். தற்போது மாநகராட்சி எடுத்துள்ள இந்த நடவடிக்கை, புதிய பகுதிகளுக்கு வருபவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும். இத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட்டால், வாகன ஓட்டிகளிடையே சுயக்கட்டுப்பாட்டை உருவாக்குவதுடன், சாலைப் போக்குவரத்தை சீரானதாகவும், கணிக்கக்கூடியதாகவும் மாற்றும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தகவல் பலகைகளில் தரமான குறியீடுகளை பயன்படுத்துவது, விபத்துகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க உதவும் ஒரு முக்கிய காரணியாகும். குறிப்பாக இரவு நேரங்களில் தெளிவாக தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகளுடன் கூடிய இந்த நவீன பலகைகள், சென்னையின் சாலைகளை பன்னாட்டு தரத்திற்கு இணையாக மாற்றும். விபத்துகளின் தீவிரம் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: