×

கோடைகாலத்தையொட்டி மின்தேவை புதிய உச்சம் ஒரே நாளில் 21 ஆயிரம் மெகாவாட் பதிவு: நடப்பாண்டில் 2வது முறையாக அளவை தாண்டியது

சென்னை: கோடைக்காலத்தையொட்டி தமிழகத்தில் மின் தேவை ஒரே நாளில் 21 ஆயிரம் மெகாவாட் பதிவாகியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக வீடுகளில் இருக்கும் ஏசி, மின் விசிறி, டிவி, ஃபிர்ஜ் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் இம்மாதம் மின்சார தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.

முன்னதாக ஏப்ரல் 17ம் தேதி 21 ஆயிரத்தை தாண்டி மின் தேவை இருந்தது. இந்நிலையில் 2வது முறையாக ஏப்ரல் 21ம் தேதி (செவ்வாய்க்கிழமை) 21 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த செவ்வாய் கிழமை இரவு 10.30 மணியளவில் அதிகப்படியான மின் தேவை ஏற்பட்டிருப்பது ஆச்சரியம் அளித்துள்ளது. உதாரணமாக ஏப்ரல் 21ம் தேதி மின்சார பயன்பாடு 462.38 மில்லியன் யூனிட்களாக இருந்தது. அதில் தமிழக மின்சார வாரியத்தின் நடவடிக்கையால் நிலக்கரி, எரிவாயு, ஹைட்ரோ பிளாண்ட்கள் மூலம் 77 மில்லியன் யூனிட்கள் கிடைத்தன.

மத்திய பவர் பிளாண்ட்கள் மூலம் 127 மில்லியன் யூனிட்கள் பெறப்பட்டன. எஞ்சிய 86.5 மில்லியன் யூனிட்கள் வெளி சந்தையில் குறுகிய மற்றும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்பட்டவையாகும். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இன்னும், கத்திரி வெயில் தாக்கம் தொடங்காத நிலையில் இது போன்ற தேவைகள் உருவாகி உள்ளது இது வாரியத்திற்கு ஒரு சவாலானது தான். காரணம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மின் விசிறி, ஏசி, கூலர் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏற்கனவே அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக கட்டடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், மால்கள் உள்ளிட்டவற்றின் ஏசி பயன்பாடு அதிகமாக இருக்கும். இதனுடன் வீடுகளிலும் ஏசி பயன்பாடு அதிகரித்திருக்கிறது. முன்பு பணம் படைத்தவர்களின் வீடுகளில் இருந்த ஏசி மற்றும் ஃப்ரிஜ் போன்ற உபயோக பொருட்கள் இப்போது நடுத்தர குடும்பங்களிலும் வந்துள்ளதால், மின் தேவை என்பது இயல்பாகவே அதிகரிக்கும்.

அதனை சமாளிக்க தான் பல்வேறு வழிகளில் மாநிலத்தில் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதில் மின்வாரியம் முனைப்பு காட்டுகிறது. நிலக்கரி எரிபொருள் மட்டுமின்றி சூரிய சக்தியையை பயன்படுத்தி மின்சார தயாரிப்பை முடுக்கி விட்டுள்ளோம். இதுதவிர, சூரிய மின் சக்தி, காற்றாலை போன்வற்றில் இருந்தும் மின்சார தேவை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், கோடைகாலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களும் சிக்கனமாக மின்சாரத்தை கையாளும் பட்சத்தின் மின்வெட்டு பிரச்சனை என்பது இருக்காது அதனையும் விழிப்புணர்வாக நுகர்வோரிடம் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai ,Electricity Board ,Tamil Nadu ,
× RELATED சென்னை புறநகர் வழித்தடத்தில் 2வது ஏசி...