நாகர்கோவிலில் கருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர்கள் மறியல்

நாகர்கோவில், பிப்.24: நாகர்கோவிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 253 பேர் கைது செய்யப்பட்டனர். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நேற்று சத்துணவு பணியாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் தங்கம் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் லீடன் ஸ்டோன், செயலாளர் விஜயகுமார், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வில்பிரட், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் இந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் செய்தபெண்களை போலீசார் கைது செய்து மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். மொத்தம் 253 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஆண்கள், பெண்கள் கருப்பு உடைகள் அணிந்திருந்தனர்.  முன்னதாக நிருபர்களிடம் பேசிய நிர்வாகிகள், கடந்த 37 ஆண்டுகளாக சத்துணவு ஊழியர்களை ஏமாற்றி வருகிறார்கள். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா கொடுத்திருந்த உறுதிமொழிப்படி காலமுறை ஊதியம் வழங்க மறுத்து வருகிறார். அதிமுகவை நம்பி இருந்த சத்துணவு ஊழியர்களை கடலில் தள்ளி விட்டு விட்டார் என்றனர்.

Related Stories: