சூரத்: பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சூரத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உணவின்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலை காரணம் காட்டி, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் கள்ளச் சந்தையில் ஒரு கிலோ எரிவாயு 500 ரூபாய்க்கு விற்கப்படும் அவலம் நிலவுகிறது. கடந்த சில வாரங்களாகவே குஜராத் மாநிலம் சூரத்தின் ஜவுளி மற்றும் வைரத் தொழில் நிறுவனங்களில் பெரும் உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 30 சதவீத பணியாளர்கள் அதாவது 3 லட்சம் பேர் வாழ்வாதாரம் தேடி நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
‘வேலை இருந்தும் சமைக்க எரிவாயு காஸ் சிலிண்டர் இல்லாததால் பசியுடன் இருக்க வேண்டியுள்ளது, அதனால் சொந்த ஊருக்கே திரும்புகிறோம்’ என்று வெளிமாநில தொழிலாளர்கள் குமுறுகின்றனர். இந்த இக்கட்டான சூழலில், நேற்று சூரத் மாவட்டம் உத்னா ரயில் நிலையத்தில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாருக்குச் செல்ல 23,000 பேர் திரண்டதால் பெரும் கலவரம் போன்ற சூழல் நிலவியது. கடும் கோடை வெயிலில் 16 மணி நேரம் வரை காத்திருந்த மக்கள் மீது போலீசார் இரக்கமின்றி தடியடி நடத்தினர்; இதில் தண்ணீர் கூட கிடைக்காமல் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மயங்கி விழுந்தனர். சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் மக்கள் அவதிப்பட்ட நிலையில், ரயில்வே நிர்வாகம் அனைத்தும் சீராக இருப்பதாக பொய் கூறி வருவது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘இனிமேல் இந்த நகரத்திற்கு திரும்பவே மாட்டேன்’ என்று கண்ணீருடன் தொழிலாளர்கள் வெளியேறுவது ஒன்றிய, மாநில பாஜக அரசின் நிர்வாக தோல்வியையே என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து மேற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உத்னா ரயில் நிலையத்தில் மட்டும் சுமார் 23,000க்கும் மேற்பட்ட பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு ரயில்கள் மூலம் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது கூட்டத்தை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ஒரு சில இளைஞர்கள் மீற முயன்றதால் சிறிய அளவில் சலசலப்பு ஏற்பட்டது;
உடனடியாக அங்கிருந்த போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரயில் நிலையங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது; எனவே அதிகாரப்பூர்வமற்ற தவறான தகவல்களையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளது.
