* 26 ஆண்டுக்கு பின் நீதி கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி
புதுடெல்லி: ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவரை சட்டவிரோதமாக கைது செய்த வழக்கில் சிபிஐ இணை இயக்குநர் உள்ளிட்ட இருவரை டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1985ம் ஆண்டு பேட்ச் ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அசோக் குமார் அகர்வால், 2000ம் ஆண்டு டெல்லி அமலாக்கத்துறையில் துணை இயக்குநராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், கடந்த 2000ம் ஆண்டு அக். 19ம் தேதி அசோக் குமார் அகர்வாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.
அப்போது சிபிஐ தரப்பில் டிஎஸ்பியாக இருந்த ரம்னீஷ் கீர் (தற்போது சிபிஐ இணை இயக்குநர்) மற்றும் இன்ஸ்பெக்டராக இருந்த வி.கே.பாண்டே (ஓய்வுபெற்ற ஏசிபி) ஆகியோர் அகர்வாலை வலுக்கட்டாயமாக மாடியில் இருந்து இழுத்துச் சென்று கைது செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து அசோக் குமார் அகர்வால் 2001ம் ஆண்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சிபிஐ அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தன்னை துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதித்துறை நடுவர் ஷஷாங்க் நந்தன் பட், கடந்த சனிக்கிழமை தீர்ப்பை வழங்கினார்.
அதில், அசோக் குமார் அகர்வால் மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அகர்வாலின் இடைநீக்கத்தை ரத்து செய்ய உத்தரவிட்ட நிலையில், அதை முறியடிப்பதற்காகவே சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டு இந்த சோதனையை நடத்தி அவரை கைது செய்தது உறுதியானது. மேலும், ‘சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதுடன், அசோக் குமார் அகர்வாலை பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இதன்படி சிபிஐ இணை இயக்குனர் ரம்னீஷ் கீர் மற்றும் ஓய்வுபெற்ற ஏசிபி வி.கே.பாண்டே ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் 27ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நீதி கிடைத்துள்ளதாக அசோக் குமார் அகர்வால் தரப்பில் நெகிழ்ச்சியுடன் கூறப்பட்டது.
