இம்பால்: மணிப்பூரில் இரு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடந்த போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டம் திரோங்லோபி கிராமத்தில் 4 வயது சிறுவன் மற்றும் அவனது பச்சிளம் தங்கை ஆகியோர் கடந்த 7ம் தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். இந்த கொடூரமான சம்பவத்தைக் கண்டித்து மெய்ரா பைபிஸ் மற்றும் மெய்தி சமூக அமைப்புகள் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. குழந்தைகளின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்து வரும் நிலையில், கடந்த 7ம் தேதி சிஆர்பிஎப் முகாமை முற்றுகையிட்ட போது நடந்த மோதலில் 3 பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 18ம் தேதி இரவு இம்பாலில் நடந்த தீப்பந்த ஊர்வலத்தின் போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தினர். இதில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 4 பொதுமக்கள் காயமடைந்தனர். மேலும், கடந்த 17ம் தேதி ஒரு நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை போலீசார் தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது. இச்சம்பவங்களைக் கண்டித்து நேற்று மணிப்பூர் பள்ளத்தாக்கு பகுதிகளில் 5 நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் சந்தைகள் மற்றும் கடைகள் மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகிறது.
இது குறித்து மணிப்பூர் முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறுகையில், ‘குடியிருப்பு மற்றும் மருத்துவமனை பகுதிகளில் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் அமைதி காக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே, இம்பால் மேற்கு மாவட்ட எஸ்பி சிவகாந்த சிங் கூறுகையில், ‘போராட்டத்தின் பெயரில் சமூக விரோதிகள் பெட்ரோல் குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபடுகின்றனர்’ என்று குற்றம் சாட்டினார். ெதாடர் பதற்றம் நிலவுவதால் ராணுவத்தினர் மற்றும் போலீசார் முக்கிய பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
