ஈரோடு, ஏப்.20: சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பொதுமக்கள், வோளண்மை, விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், ‘‘வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை” வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கங்காபுரத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, கோட்டாட்சியர் சிந்துஜா, மாவட்ட ஊராட்சி செயலாளார் தனம், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்.
