×

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

ஈரோடு, ஏப். 19: காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த சித்தையன் மகள் வைகை தர்ஷினி (23). பிஎஸ்சி முடித்துள்ளார். தனியார் ஆய்வகத்தில் லேப் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று அவரது காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். அப்போது, வைகை தர்ஷினி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

என் கணவர் பிரபாகரன் (33). பி.காம் பட்டதாரி. லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் மேலாளராக உள்ளார். இருவரது வீடும் அருகருகே உள்ளது. நாங்கள் ஓராண்டாக காதலித்தோம். எனது வீட்டுக்கு வந்து பிரபாகரன் பெண் கேட்டார். ஆனால், எனது குடும்பத்தினர் திருமணத்திறகு மறுப்பு தெரிவித்தனர். இதனால், நான் வீட்டை விட்டு வெளியேறி, திருச்சி சென்று அங்குள்ள பெருமாள் கோயிலில் பிரபாகரனின் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

இதையறிந்த என் குடும்பத்தினர் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனக்கும், என் கணவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். தொடர்ந்து, காதல் திருமணம் செய்த இருவரையும் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வைகை தர்ஷினியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags : Erode SP ,Erode ,Vaigai Darshini ,Sidhaiyan ,Sangakiri ,Salem district ,
× RELATED பெருந்துறையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாகன பேரணி