- அமித் ஷா
- Palaniswami
- பி. சிதம்பரம்
- காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்
- நிதி அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தில்லி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று முன்தினம் இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: அரசியல் சாசன திருத்த மசோதாவை தோற்கடித்துள்ளோம். டெஸ்ட் மேட்சில் தமிழ்நாடு டெல்லியை தோற்கடித்துள்ளது. இரண்டு ஆண்டுகள் அரசியல் சாசனத்தில் கை வைக்காத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கை வைக்க துணிச்சல் வந்துள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் 68 எம்.பிக்கள் வரமாட்டார்கள் என துணிச்சலுடன் இந்த மசோதாவை கொண்டு வர முயன்றனர். ஆனால் 68 எம்.பிக்களும் ஆஜராகி இந்த மசோதாவை தோற்கடித்துள்ளனர். நமது இன்றைய பிரதிநிதித்துவம் 24.3 என்ற அளவில் உள்ளது. இந்த திருத்தம் நிறைவேறி இருந்தால் 5 மாநிலங்களுக்கு நமது பிரதிநிதித்துவம் 20.7 ஆக குறைந்து இருக்கும். 5ல் ஒரு பங்காக குறைந்து இருக்கும். இது எனக்கு தெரிந்த கணக்கு.
ஆனால், நமது கணக்கு புலி எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டால் 7.18 என்ற பிரதிநிதித்துவம் 7.23 என உயரும் என கூறியுள்ளார். அதிமுக, பாஜ, அமமுக மூன்று பேரும் எனக்கு கணக்கு பாடம் கற்றுக்கொடுங்கள். 7.18 என்பது எப்படி 7.23 ஆக உயரும் என கற்றுக்கொடுங்கள். அரசியல் சாசனம் திருத்தம் பாதகமா, பாதகம் இல்லையா என கேட்டால் எடப்பாடி பழனிசாமி பாதகம் என கூற வேண்டும் அல்லது பாதகம் இல்லை என கூற வேண்டும். ஆனால் அவர் அமித்ஷாவிடம் பேசினேன். அவர் பாதகம் இல்லை என கூறினார். எனவே நானும் பாதகம் இல்லை என கூறுகிறேன் என்கிறார்.
அமித்ஷா சொன்னார், நான் சொன்னேன் என எடப்பாடி பழனிசாமி கூறினால் அவர் என்ன ஒலிபெருக்கியா. அப்படி என்றால் எடப்படி பழனிசாமிக்கு, ‘ஒலிபெருக்கி பழனிசாமி’ என பெயர் வைக்கலாம். அமமுக விசித்திரமான கட்சி. அதிமுக உடைந்து அமமுக உருவானது. அமமுக உடைந்து சசிகலா கட்சி உருவாகி உள்ளது. எதிர்காலத்தில் இந்த கட்சி உடையாது என்பதில் உத்திரவாதம் இல்லை. நாம் தமிழர் கட்சிக்கு உலகே பகை. உலகில் உள்ள அனைத்து தலைவர்களும் பகை. நம் மாவட்டத்தை சேர்ந்தவர், ஆனால் நமது தொகுதியை சேர்ந்தவர் இல்லை.
கடந்த தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்கள். நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்போம் என தெரியும். நாம் தமிழர் கட்சிக்கு போடும் வாக்கு நோட்டாவுக்கு போடும் ஓட்டு. தவெக பக்கம் இளைஞர்கள், இளம்பெண்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். ஈர்ப்பு ஒன்றே தேர்தலில் வாக்களிக்க காரணமாக முடியாது. 180 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் சுவடே இல்லை. அவர்கள் தோல்வியடைவார்கள். தனி மனிதன் ஆட்சி அமைக்க முடியாது. இவ்வாறு பேசினார்.
‘‘தமிழ்நாட்டில் குற்றங்கள் மலிந்து விட்டன என குற்றச்சாட்டு கூறுகின்றனர். இந்தியாவில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களில் எத்தனை குற்றங்கள் நடக்கிறது என்பதை கணக்கிட டெல்லியில் தேசிய குற்றவியல் பதிவேடு என்ற அமைப்பு உள்ளது. அவர்களின் 2023 தரவுகள்படி தமிழ்நாட்டில் 8,943 முக்கிய குற்றங்கள் பதிவாகி உள்ளது. பீகாரில் 22,962 முக்கிய குற்றங்கள் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிராவில் 42,101 குற்றங்கள் பதிவாகி உள்ளது.
உ.பி.யில் 66,381 குற்றங்கள் பதிவாகி உள்ளது. இந்த தரவுகளின்படி தமிழ்நாடா, குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள், பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வரதட்சணை கொடுமையால் நடந்த கொலைகள் தமிழ்நாட்டில் 11, மகாராஷ்டிராவில் 462, பீகாரில் 1143, உ.பி 2122. எனவே தமிழ்நாடு குற்றங்கள் மலிந்த மாநிலம் என கூறுவது அவதூறு’’ என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
