×

ரிமோட் மூலம் தமிழ்நாட்டை பாஜ இயக்க நினைக்கிறது: கே.சி.வேணுகோபால்

 

கோவை ராமநாதபுரம் பகுதியில் சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதியை ஆதரித்து அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் எம்பி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: பாஜவும், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளும் தமிழகத்தை அடிமையாக மாற்ற முயற்சி செய்கின்றனர். பாஜ தமிழக அரசு நிர்வாகத்தை தங்களது ரிமோட் மூலம் இயக்க நினைக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக மோடியும், அமித்ஷாவும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு தொடர்ந்து இடையூறு அளித்து வருகின்றனர்.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழக எம்.பி.,க்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயன்றனர். தமிழகத்தை ஒன்றிய பாஜ., அரசு நிராகரிக்கிறது. எந்த நிதியையும் தமிழகத்துக்கு தருவதில்லை. இங்குள்ள திமுக., காங்கிரஸ் கூட்டணி அரசு பெண்களுக்கு உரிய உரிமைகளைத் தருகிறது. மகளிருக்கு எவ்வளவு சிறப்பு திட்டங்களை கொடுத்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியும்.

ஏழை, எளிய மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதில், திமுக., கூட்டணி அரசு தெளிவாக உள்ளது. பாஜ.,வும், பிரதமர் மோடியும் மக்களைப் பிளவுபடுத்துகின்றனர். தமிழ் மொழிக்கும், மக்களுக்கும் பாஜ., எதிரானது. தமிழகத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் பாஜ.,வின் எண்ணம். கடந்த 5 ஆண்டுகளாக கவர்னர் மூலம் தமிழக அரசைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக மக்களை வஞ்சிக்க விடமாட்டோம் என்பதில் ராகுல் உறுதியாக நிற்கிறார். கோவைக்கு வந்த மோடி, பெண்கள் உரிமை பற்றி பேசுகிறார். உண்மையில் பெண்கள் உரிமைக்காக அவர் எதுவுமே செய்யவில்லை. தமிழக மாணவர்களுக்கு வர வேண்டிய ரூ.2,000 கோடி கல்வி நிதியை ஒன்றிய பா.ஜ., அரசு தர மறுக்கிறது.

கோவைக்கு வர வேண்டிய மெட்ரோ ரயிலை கொடுக்க மறுக்கின்றனர். தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜ.,வையும் அதிமுக.,வையும் இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் ஒன்றிணைந்து முழுமையாக தோற்கடிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : BJP ,Tamil Nadu ,K.C. Venugopal ,Coimbatore ,Ramanathapuram ,All India General Secretary ,Congress ,Srinidhi ,Singanallur ,National Democratic Alliance ,
× RELATED விஜய்க்கு போடும் ஓட்டு என்டிஏவுக்கே...