பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (54). இவர் நேற்றுமுன்தினம் இரவு கே.பி.பார்க் வெளியே நின்றிருந்தபோது குடிபோதையில் வந்த 4 பேர் சண்முகத்திடம் தகராறு செய்து கத்தியால் வெட்டினர். இதில் காயம் அடைந்த சண்முகம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து கே.பி.பார்க் பகுதியைசேர்ந்த சந்தோஷ் என்கின்ற தவக்களை சந்தோஷ் (27), சூர்யா என்கின்ற பெண்டு சூர்யா (20), பிரகாஷ் என்கின்ற ஸ்டீபன் பிரகாஷ் (26), ஜவ்வு அப்பு என்கின்ற பிரேம்குமார் (21) ஆகிய சரித்திர பதிவேடு ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்கின்ற காட்டன் ராஜ என்ற சரித்திர பதிவேடு ரவுடியை நேற்று எம்கேபி நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திடீர் நகர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வியாசர்பாடி பி.கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த விக்ரம் (42) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் குடிபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அயனாவரம் பகுதியை சேர்ந்த இளவரசன் (26) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை ஓட்டேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
