சாவ் பாலோ: பிரேசில் நாட்டின் யூபர்லாண்டியா உலக அழகி 2025ம் ஆண்டு பட்டம் வென்ற சாரா மான்டீரோ (36), இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1,08,000 பின்தொடர்பவர்களை கொண்டு பிரபலமானவராக இருந்தார். இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் சொகுசு கார்கள், கப்பல்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என ராஜவாழ்க்கை வாழ்ந்து வந்ததோடு, ஒரு ஆடை விற்பனை நிலையத்தையும் நடத்தி வந்தார். இவருடைய இந்த அதீத வருமானம் குறித்து சந்தேகமடைந்த அந்நாட்டு அதிகாரிகள் ‘ஆபரேஷன் லக்சரி’ என்ற பெயரில் ரகசிய விசாரணை நடத்தினர்.
தொடர் விசாரணையில் மினாஸ் ஜெரைஸ், சாவ் பாலோ மற்றும் மாடோ கிராசோ டோ சுல் ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி கும்பல் செயல்படுவது கண்டறியப்பட்டது. முன்னதாக, போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு பண்ணை வீட்டின் அருகே இவர் தனது நாயுடன் உலா வந்ததையடுத்து, கடத்தல் கும்பலுடன் இவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், பிரேசிலின் சாவ் பாலோ நகரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சாரா மான்டீரோ கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையின் போது 5.9 டன் கஞ்சா மற்றும் 20 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, இதுவரை மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
