×

11 மாத குழந்தையின் சிகிச்சையில் அலட்சியம்; 4 டாக்டர்கள், 2 நர்சுகள் மீது வழக்கு: மகாராஷ்டிராவில் பரபரப்பு

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே தன்காவடி பகுதியைச் சேர்ந்த வக்கீல் (34) ஒருவரின் 11 மாத பெண் குழந்தைக்கு கடந்த ஆண்டு வாந்தி மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக கடந்த 2025ம் ஆண்டு மே 22ம் தேதி நவி பெத் பகுதியில் உள்ள சின்மய் நர்சிங் ஹோம் மருத்துவமனையில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தனது குழந்தையின் மரணத்திற்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி குழந்தையின் தந்தை சககார்நகர் போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து மருத்துவமனை கமிட்டி நடத்திய ஆய்வில், குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதும், மருத்துவ விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையின் மரணத்திற்கு காரணமான 4 குழந்தை நல டாக்டர்கள் மற்றும் 2 நர்சுகள் மீது கவனக்குறைவால் மரணம் விளைவித்தல், ஏமாற்றுதல் மற்றும் தவறான ஆதாரங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு 8.5 கிலோ எடையுடன் இருந்த குழந்தை, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஒரே நாளில் 1.5 கிலோ உடல் எடையை இழந்து 7 கிலோவாக குறைந்துள்ளது. குழந்தையின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், இரவு 10 மணி அளவில் மீண்டும் வாந்தி எடுத்த குழந்தையை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றாமல் டாக்டர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து டாக்டர் முகுந்த் சங்கமநேர்க்கர் கூறுகையில், ‘சிகிச்சைக்கு பின் குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். தற்போது எங்கள் மீது புகார் அளித்துள்ளனர், சட்டப்படி இதனை எதிர்கொள்வோம்’ என்று தெரிவித்தார்.

Tags : Maharashtra ,Pune ,Thangavati ,Pune, Maharashtra ,Navi Beth ,
× RELATED மத்திய அரசு ஊழியர்கள்,...