×

தங்கம் கடத்தல் வழக்கில் அதிரடி: நடிகை ரன்யாவின் சிறைவாசத்தை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி: துபாயில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவ் மீதான சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த 2014ம் ஆண்டு கன்னட நடிகர் சுதீப்புடன் ‘மாணிக்யா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஹர்ஷவர்த்தினி ரன்யா (ரன்யா ராவ்), துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு கடந்த 2025ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி வந்திறங்கினார். அப்போது வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர் தனது பெல்ட் மற்றும் ஜாக்கெட் பகுதியில் மறைத்து வைத்திருந்த 14.2 கிலோ எடையுள்ள 17 வெளிநாட்டு தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த கடத்தல் நெட்வொர்க்கில் தொழிலதிபர் சாகில் சர்க்காரியா ஜெயின் என்பவருக்கு தொடர்பு இருப்பதும், ஹவாலா மூலம் சுமார் 39.26 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்ததும் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து இவர்கள் இருவரும் ‘கோபிபோசா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சிறை தண்டனையை எதிர்த்து நடிகையின் தாய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோடீஸ்வர சிங் அடங்கிய அமர்வு, சமீபத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

அதில், ‘பாதுகாப்பு விதிகள் காரணமாக சிசிடிவி காட்சிகளை பென் டிரைவ் மூலம் வழங்க முடியாது என்றாலும், சிறையில் அதனை காண்பித்ததே சட்டப்படி போதுமானது’ என்று கூறி நடிகையின் மனுவை தள்ளுபடி செய்தது. கடத்தல் கும்பலுடன் நடிகைக்கு தொடர்பு இருந்ததால், இந்த தடுப்புக்காவல் செல்லும் என்றும் நீதிமன்றம் உறுதி செய்ததால் நடிகைக்கு ெபரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,Ranya ,New Delhi ,Ranya Rao ,Dubai ,Harshavardhani ,Sudeep ,
× RELATED மத்திய அரசு ஊழியர்கள்,...