புதுடெல்லி: லோக்சபாவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா படுதோல்வி அடைந்தது. இதனால் ஒன்றிய பாஜக அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பகல் கனவை முற்றிலுமாக தகர்த்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் லோக்சபா தொகுதி வரையறை போன்ற சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திணிக்க முயன்று வருகிறது. இந்நிலையில், நேற்று லோக்சபாவில் தொகுதி வரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான 131வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்தது.
ஆனால், இந்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் அந்த மசோதா படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்ட பாஜக அரசுக்கு நேற்றைய சம்பவம் மரண அடியாக அமைந்துள்ளது. இதனால் அவமானம் அடைந்த ஒன்றிய பாஜக அரசு, 2026ம் ஆண்டு தொகுதியாக்க மசோதாவை வேறுவழியின்றி திரும்பப் பெற்றது. இந்த தொகுதி மறுவரையறை மசோதா மூலம் லோக்சபா இடங்களை 543ல் இருந்து 850 ஆக உயர்த்த ஒன்றிய பாஜக அரசு திட்டம் தீட்டியது. மேலும், தற்போது நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக காத்திருக்காமல், பழைய 2011ம் ஆண்டு தரவுகளைப் பயன்படுத்தி உடனடியாக தொகுதி எல்லைகளை மாற்றி அமைக்கவும் துடித்தது. அதுமட்டுமின்றி, 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை இந்த அவசர தொகுதி மறுவரையுடன் இணைத்து, வரப்போகும் 2029ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அரசியல் லாபம் தேட ஒன்றிய அரசு தீட்டிய வஞ்சக திட்டமும் ேநற்றைய தோல்வியால் சுக்குநூறானது.
தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்கள் மக்கள் தொகை பெருக்கத்தை சிறப்பாக கட்டுப்படுத்தி வரும் நிலையில், இந்த மசோதா அவர்களுக்கு பெரும் துரோகமாக அமைந்தது. மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளைப் பிரித்தால், தென் மாநிலங்கள் தங்களின் அரசியல் பலத்தை இழந்து, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற வடமாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும். இதை உணர்ந்த தென் மற்றும் வடகிழக்கு மாநில எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரண்டு பாஜகவின் சதியை முறியடித்தனர். 131வது திருத்த மசோதா தோல்வியடைந்ததால், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் 2027 அல்லது 2028ம் ஆண்டு வெளியாகும் வரை, பழைய 1971ம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே லோக்சபா இடங்கள் நீடிக்கும் நிலை உறுதியாகியுள்ளது.
தொகுதி வரையறைக்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போட்ட நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் திட்டம் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒன்றிய அரசு சிறப்புக் குழு அமைத்தது. இந்த குழு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கருத்துக்களை கேட்டு, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் தனது விரிவான அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்தது. இதில், முதல் கட்டமாக லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும், அடுத்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரை அறிக்கைக்கு கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றிய அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, இதற்கான சிறப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்த மசோதா சட்டமாக மாற்ற வேண்டுமானால், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள 83, 85, 172, 174 மற்றும் 356 ஆகிய முக்கிய பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். லோக்சபாவில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு சிறப்பு பெரும்பான்மை, அதாவது 362 எம்.பி.,க்களின் ஆதரவு வாக்குகள் இதற்கு கட்டாயம் தேவைப்படும்.
அதுமட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டசபைகளிலும் இந்த மசோதாவுக்கு முறையான ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், இந்த திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொகுதி மறுவரை மசோதா விசயத்தில் நேற்று ஒன்றிய அரசை எதிர்கட்சிகள் தோற்கடித்தது போல், ஒன்றிய பாஜக அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பகல் கனவை முற்றிலுமாக தகர்த்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
