கிருஷ்ணகிரி, ஏப்.18: தேர்தல் நாளில் டவுன் பஸ்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அரசு டவுன் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 23ம் தேதி நடைபெறும் தேர்தலில், அனைத்து தரப்பு மக்களும் வாக்களிப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பார்வை குறைபாடு மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், டவுன் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பார்வை குறைபாடு மற்றும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் அனைவரும், தேர்தல் நாளன்று ஆதார் அட்டை, வாக்காளர் தகவல் சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து டவுன் பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்து, தங்களின் வாக்கை செலுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
