×

குட்டையில் விழுந்த சிறுவனை தேடும் பணி 2வது நாளாக தீவிரம்

நாமகிரிப்பேட்டை, ஏப்.18: வெண்ணந்தூர் அருகே தாத்தாவுடன் மீன்பிடிக்க சென்ற இடத்தில், குட்டையில் தவறி விழுந்த இரண்டரை வயது சிறுவனை மீட்க, 2வது நாளாக தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், தாண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பரசுராம் மகன் பெருமாள். இவர் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள ஆத்துமேடு பகுதியில் தங்கி, நெல் அறுக்கும் இயந்திரத்தின் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை பரசுராம், தாய் பார்வதி, மனைவி சந்தியா (22) ஆகியோர் அப்பகுதியில் உள்ள கணேசன் என்பவரின் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில், பரசுராமன் பெருமாளின் இரண்டரை வயது மகன் மணிகண்டனுடன் வெண்ணந்தூர் அருகேயுள்ள நெ.3. கொமராபாளையம் பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அங்கு பரசுராமன் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, சிறுவன் மணிகண்டன் திடீரென மாயமானான். பல்வேறு இடங்களில் தேடியும், அவன் கிடைக்ககாததால் குட்டையில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மாயமான சிறுவனை தேடத்தொடங்கினர். ஆனால் நீண்ட நேரமாக தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதனிடையே, போதிய வெளிச்சம் இல்லாததால், முதல் நாள் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று 2வது நாளாக குட்டையில் சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதுகுறித்து சிறுவனின் தாய் சந்தியா கொடுத்த புகாரின் பேரில், வெண்ணந்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே, தேடும் பணியில் சுணக்கம் காட்டுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : Namagiripettai ,Vennandur ,Perumal ,Parasuram ,Thandarampattu ,Tiruvannamalai district ,
× RELATED அத்தனூர் அம்மன் கோயில் தேர்த்திருவிழா