கோவை,ஏப்.17: தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்தும், கருப்பு கொடி ஏற்றியும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தும்,காந்திபுரம் 100 அடி சாலையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக் குழு செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கையில் பதாகைகளை ஏந்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜோதி குமார், மாவட்ட நிர்வாகி ஆறுச்சாமி, மக்கள் சிவில் உரிமை கழகம் தேசியச் செயலாளர் பாலமுருகன், பீப்பிள் வாட்ஸ் நிக்கோலஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
