×

கோவையில் கடந்த 3 மாதத்தில் பாம்புகளை மீட்க தீயணைப்பு துறைக்கு 1368 அழைப்புகள்

கோவை, ஏப். 14: கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பாம்புகளை மீட்க தீயணைப்பு துறைக்கு 1368 அழைப்புகள் வந்துள்ளது. இதையடுத்து வீட்டை சுற்றியும் சுத்தமாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட தீயணைப்புத்துறையில் கோவை தெற்கு, கோவை வடக்கு, பீளமேடு, கணபதி, கோவைப்புதூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட 14 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் உள்ளன.  மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையில் உதவி தீயணைப்பு அலுவலர்கள், நிலைய அலுவலர்கள், முன்னணி தீயணைப்பாளர்கள், தீயணைப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் தீ விபத்துகள் தொடர்பாகவும், மீட்புப் பணிகள் தொடர்பாகவும் தினமும் வரும் அழைப்புகளின் படி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கடந்த 3 மாதத்தில் 1368 அழைப்புகள் பாம்புகளை மீட்க மட்டும் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறியதாவது: கோவை மாவட்டத்திற்கு கடந்த 3 மாதத்தில் தீ விபத்துகள் தொடர்பாகவும், மீட்புப் பணிகள் தொடர்பாகவும் 1748 அழைப்புகள் வந்துள்ளது. அதில் 1368 அழைப்புகள் பாம்புகளை மீட்க மட்டும் வந்துள்ளது.

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 644 அழைப்புகள் வந்துள்ளது. அதில் 507 அழைப்புகள் பாம்புகளை மீட்க வந்துள்ளது. பிப்ரவரி மாதம் 496 அழைப்புகளில் 411 அழைப்பும், மார்ச் மாதம் 608 அழைப்பில் 450 அழைப்புகளும் பாம்புகளை மீட்க வந்துள்ளது. அதிக வெயில் காரணமாகவும், உணவை தேடி பாம்புகள் இடப்பெயர்ச்சி ஆகிறது. இதனால், வீடுகளில் பாம்பு நுழைந்து விடுகிறது. வீடுகளை சுற்றியும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பாம்பு உலா வருவது தெரியவந்தால் வீட்டை சுற்றி பிளீச்சிங் பவுடரை போட்டு வைத்தால் பாம்பு வருவதை தவிர்க முடியும். பாம்பு, தேனீ பிடிக்க தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாம்புகள் காயம் இல்லாமல் பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : fire department ,Coimbatore ,Coimbatore district ,Coimbatore District Fire Department ,Coimbatore South ,Coimbatore North ,Peelamedu ,Ganapathy ,
× RELATED தார்ச்சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை