×

ஒரே சிரிஞ்சை பயன்படுத்தி பலருக்கு ஊசி போட்ட அவலம்.! பாகிஸ்தானில் 331 அப்பாவி குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று…

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் 331 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஊசிகளை சுத்தம் செய்யாமல் மீண்டும் பயன்படுத்தியதால் தொற்று பரவி இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்ட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் மருத்துவமனை ஒன்றில், சிரிஞ்சுகள் மீண்டும் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ள கொடூர சம்பவத்தை அதிர்ச்சி தரும் விசாரணை ஒன்று வெளிப்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் டான்சா (Taunsa) நகரில் உள்ள THQ அரசு மருத்துவமனைக்குள் 32 மணி நேரத்திற்கும் மேலாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள், அடிப்படை சுகாதாரத் தரநிலைகள் மீண்டும் மீண்டும் மீறப்படுவதை வெளிப்படுத்தியது. ஊசி செலுத்தும் முறைகளில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பற்ற நடைமுறை காரணமாக, அங்குள்ள ஏராளமான குழந்தைகள் எச்.ஐ.வி (HIV) உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக ஒரு ரகசிய நடவடிக்கை மூலம் தெரிய வந்தது. அங்குள்ள ஊழியர்கள் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது காணொளியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவானது அபாயகரமான சுகாதார மீறல்களையும், பல நோயாளிகளுக்கு உபகரணங்களை மீண்டும் பயன்படுத்துவதையும் வெளிப்படுத்தியதுடன், பாதுகாப்பற்ற மருத்துவ நடைமுறைகளுடன் தொடர்புடைய தீவிர தொற்று பரவலுக்கு பங்களித்தது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மாகாண அளவிலான பரிசோதனைத் திட்டம் மற்றும் கசிந்த ஆவணங்கள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நவம்பர் 2024 முதல் அக்டோபர் 2025 வரையிலான காலகட்டத்தில், டான்சா நகரில் குறைந்தது 331 குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முகமது அமீன் என்ற எட்டு வயது சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்தே, இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது. அவனது சகோதரியான அஸ்மாவுக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது, ​​அசுத்தமான ஊசிகளின் மூலமாகவே தங்கள் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று பரவியதாக அவர்களின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

32 மணி நேரம் ரகசியமாக பதிவுசெய்யப்பட்ட காட்சிகளை ஆய்வு செய்த தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் அல்தாஃப் அகமது, ஊசிக்கு ஒரு புதிய needle பொருத்தப்பட்டிருந்தாலும் கூட, ஊசியின் அடிப்பகுதி (barrel) வழியாக வைரஸ்கள் பரவ கூடும் என்று தெரிவித்தார். அதாவது ஒவ்வொரு முறையும் புதிதாக முழு சிரிஞ்சையும் மாற்றாமல் புதிய Needle-ஐ மட்டுமே மாற்றி பயன்படுத்தினாலும் தொற்றுகள் பரவும் அபாயம் இருக்கிறது. இதனிடையே இந்த தொற்றுநோய் பரவல் முதன்முதலில், ஒரு தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவரால் கண்டறியப்பட்டது. HIV தொற்று உறுதி செய்யப்பட்ட 65 முதல் 70 வரையிலான குழந்தைகளில் பெரும்பாலோர், டான்சாவில் உள்ள THQ மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றிருந்ததாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மிக முக்கிய அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட கவனக்குறைவின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் சுகாதாரத் துறையின் செயல்பாடு குறித்து சோஷியல் மீடியாக்களில் தீவிரமாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

Tags : Pakistan ,Islamabad ,
× RELATED நீண்ட காலத்திற்கு எரிபொருள், உர...