×

மீனாட்சியம்மன் கல்லூரியில் சாட்பாட் தேர்தல் விழிப்புணர்வு

காஞ்சிபுரம், ஏப்.12: காஞ்சிபுரம் மீனாட்சியம்மன் கல்லூரியில் முதன் முறையாக வாக்களிக்கும் மாணவர்களுக்காக தனிப்பட்ட சாட்பாட்டை தொடங்கி வைத்து, சாட்பாட்க்கான தேர்தல் விழிப்புணர்வு விளம்பர பதாகையை, தேர்தல் அலுவலர் சினேகா வெளியிட்டார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சி அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சினேகா தலைமையில் நடந்தது.

இதில், முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுக்கு வாக்குப்பதிவு செயல்முறையை எளிதாக அறிந்துகொள்ள உதவும் தனிப்பட்ட சாட்பாட் தொடங்கி வைத்து, சாட்பாட்-க்கான தேர்தல் விழிப்புணர்வு விளம்பர பதாகையை வெளியிட்டார். அப்போது, தேர்தல் அலுவலர் சினேகா தலைமையில், முதல்முறை வாக்காளர்கள் இணைந்து, தேர்தல் விழிப்புணர்வு வாக்களிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. பின்னர், தேர்தல் விழிப்புணர்வு செல்பி பாய்ண்ட்டில், தேர்தல் அலுவலர் சினேகாவுடன், மாணவர்கள் புகைப்படம் எடுத்துகொண்டனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். கல்லூரி மாணவர்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்த ‘மாதிரி வாக்குச்சாவடி’ மையத்தில் வாக்குப்பதிவு செயல்முறையை பார்வையிட்டார்.

இதுகுறித்து, தேர்தல் அலுவலர் சினேகா கூறுகையில்; ‘முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களுக்கு சிறப்பு முக்கிய அம்சமாக வாக்குப்பதிவு செயல்முறையை எளிதாக அறிந்து கொள்ள உதவும் வகையில், சாட்பாட் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சாட்பாட் மூலம் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு, தெளிவான தகவல்களை பெற முடியும். மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பது எப்படி என்ற ரோல் பிளே நிகழ்ச்சி வாக்களிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை உணர செய்கின்றது.

மாணவர்களை சமூக பொறுப்புடன் செயல்பட ஊக்குவிக்கும் வகையில், இந்த முயற்சிகள் அனைத்தும் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பயன்படுத்துவதில் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே. மாணவர்களாகிய நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதில் முதன்மை மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை முதன்மை படுத்த வேண்டும்’ என்றார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Meenakshi Amman College ,Kanchipuram ,Election Officer ,Sneha ,Tamil Nadu Legislative Assembly General Elections 2026 ,
× RELATED பெரும்புதூர் பகுதியில் கள்ள சந்தையில் சிலிண்டர் விற்பனை அதிகரிப்பு