சென்னை, ஏப்.12: பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் முரளி (36). இவர், கடந்த 2019ம் ஆண்டு தனது முதல் மனைவியின் 16 வயது மகள் மற்றும் 2வது மனைவியின் 13 வயது மகள் என 2 பேரை, பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த ஆவடி அனைத்து மகளிர் போலீசார், முரளியை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, பெற்ற 2 மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த முரளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1.64 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆவடி அனைத்து மகளிர் நிலைய போலீசார், முரளியை சிறையில் அடைத்தனர்.

