×

அருமனையில் பெண்ணுடன் ரகசிய தொடர்பு சம்பவம்; சரமாரி தாக்குதலில் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி

 

* கொலை வழக்காக மாற்றம்
* கணவர் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு

அருமனை: குமரி மாவட்டம் குலசேகரம் அருகே பொன்மனை மண்ணாரன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (48). அவரது மனைவி லதா (44). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜஸ்டின் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அருமனை பகுதியை சேர்ந்த அஜி (52) என்பவர் ரப்பர் பால் வெட்டும் வேலைக்காக ஈஞ்சகோட்டில் ஜஸ்டின் வீட்டருகே குடி வந்துள்ளார். அப்போது அஜி, லதா இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அஜி அருமனை அருகே காரோடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து லதா, கணவரை விட்டு பிரிந்து ஒரு மகனுடன் வாடகை வீட்டில் குடியேறினார்.

பின்னர் 6 மாதங்களுக்கு முன்பு இந்த விவகாரம் அஜியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் அவர் லதாவுடன் நிரந்தரமாக தங்கினார். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி லதா, அஜி வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற லதாவின் கணவர் ஜஸ்டின், விஜித் உள்பட 4 பேர் ஜன்னல், கதவுகளை அடித்து உடைத்ததோடு, அங்கிருந்த அஜியை சரமாரியாக ஆயுதங்களால் தாக்கினர். தடுக்க வந்த லதாவை சாவியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த தகவலின் பேரில் அருமனை இன்ஸ்பெக்டர் கமலாதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுயநினைவை இழந்த அஜியை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கும், லதாவை அருமனை அரசு மருத்துமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

பின்னர் அஜி மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்து ஜஸ்டின் உள்பட 4 பேரை வலைவீசி தேடினர். இதையடுத்து அருமனையில் பதுங்கி இருந்த ஜஸ்டின் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அஜி இன்று காலை பரிதாபாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அருமனை போலீசார் மருத்துவமனைக்கு சென்று அஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் கொலையில் தொடர்புடைய பொன்மனை வெண்டலிகோடு புனையன்குழி பகுதியை சேர்ந்த அஜித் மற்றும் பாறையில் வீட்டை சேர்ந்த குமார் மகன் சந்தீப் (24) ஆகிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே ஜஸ்டஸ் கைதான நிலையில் இச்சம்பவத்தில் மொத்தம் 3 பேர் கைதாகி உள்ளனர். தலைமறைவாக இருக்கும் விஜித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Arumana ,Saramari ,Justin ,Ponmanai Manarangodu ,Kulasekaram ,Kumari district ,Lata ,
× RELATED இ-மெயில் மூலம் நடிகை திரிஷா வீட்டிற்கு...