நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகள் தடையால் நெடுஞ்சாலைகள் நேற்று வெறிச்சோடி கிடந்தன. குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துக்களும், உயிர் பலிகளும் நடந்து வருகின்றன. இந்த விபத்துக்களால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன. குமரி மாவட்டத்தில் சாலைகள் குறுகியதாக உள்ளதால், டாரஸ் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும். நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக முடிந்த பின், லாரிகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளன. எஸ்.பி. ஸ்டாலின் பொறுப்பேற்ற இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் டாரஸ் லாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தார்.
எஸ்.பி.யின் கடும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து 1000 லாரிகள் வரை சென்ற நிலை மாறி, 300 லாரிகள் வரை எண்ணிக்கை குறைந்தன. இருப்பினும் இந்த டாரஸ் லாரிகளால் விபத்துக்கள் தொடர் கதையாகின. இந்த நிலையில் நேற்று முன் தினம் குமரி மாவட்டம் களியலை அடுத்த சிற்றாற்றின்கரையை சேர்ந்த கிறிஸ்துராஜ் (49) என்ற ராணுவ அதிகாரி தனது மகள் காட்லின் அபினாவை (19), திருச்சியில் உள்ள கல்லூரிக்கு அனுப்பி வைப்பதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். தக்கலை எம்.ஜி.ஆர். சிலை முன் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக பின்னால் வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதி சம்பவ இடத்திலேயே காட்லின் அபினா இறந்தார்.
கிறிஸ்துராஜ் படுகாயத்துடன் உயிர் தப்பினார். விபத்தை பார்த்ததும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். டாரஸ் லாரி டிரைவர் தப்ப முயன்றார். அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் டாரஸ் லாரியை தடை செய்ய கோரி, மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எஸ்.பி. ஸ்டாலின், சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து 2 நாட்கள் டாரஸ் லாரிகளுக்கு தடை விதித்தார். மேலும் டாரஸ் லாரிகளுக்கு தடை விதிப்பது தொடர்பான பரிந்துரையை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கலெக்டருக்கும், எஸ்.பி. அளித்தார். இதை தொடர்ந்து பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கருதி, நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடையும் வரை கனிம வள டாரஸ் லாரிகள் குமரி மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் அழகு மீனா உத்தரவிட்டார். இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் கூறினார். இதையடுத்து நேற்று இரவில் இருந்தே டாரஸ் லாரிகள் குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டன. இதனால் மாவட்டத்துக்குள் வந்த டாரஸ் லாரிகள் சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டன.
குறிப்பாக ஆரல்வாய்மொழி குமாரபுரம் நான்கு வழிச்சாலையில் டாரஸ் லாரிகள் நீண்ட வரிசையில் நின்றன. தோட்டியோடு பகுதியிலும் 10க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நேற்று காலை கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு சென்ற டாரஸ் லாரிகள், நேற்று இரவு திரும்பின. இந்த லாரிகள் களியக்காவிளை சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டன. மாவட்டத்தில் தற்போது புத்தேரி நான்கு வழிச்சாலை மேம்பால பணி, ஒழுகினசேரி ரயில்வே மேம்பால பணி, தோட்டியோடு மேம்பால பணி மற்றும் நான்கு வழிச்சாலை பணிகள் தொடர்ச்ச்சியாக நடக்கின்றன. இந்த பணிகளால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் உள்ளது. டாரஸ் லாரிகள் அதி வேகமாக செல்வதால், உயிர் பலிகள் நிகழ்கின்றன.
இந்த நிலையில் டாரஸ் லாரிகளுக்கான தடையை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர். தற்போது கோடை கால விடுமுறை தொடங்குவதால் கன்னியாகுமரிக்கும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் நள்ளிரவில் கார்கள், வேன்களில் வருவார்கள். திருவனந்தபுரத்துக்கும் அதிகளவில் செல்வார்கள். இந்த நிலையில் டாரஸ் லாரிகள் தடை, வரவேற்க கூடியது என அனைத்து தரப்பினரும் கூறி உள்ளனர். டாரஸ் லாரிகள் தடையால், தேசிய நெடுஞ்சாலைகள் நேற்று இரவு வெறிச்சோடி கிடந்தன.
