×

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து காட்சிகள்: இஸ்லாமிய அமைப்புகளின் கண்டனங்கள் குவிகிறது

 

 

சென்னை: நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகளின் கண்டனங்கள் குவிய தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் தேர்தலுக்கு பின் படம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டது. இதனிடையே நேற்று ஜனநாயகன் படம் இணைய தளங்களில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை செய்தது தவெகவினர் தான் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சட்ட விரோதமாக படம் வெளியான நிலையில், திரைத்துறையினர் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனநாயகன் படக்காட்சிகளை யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனநாயகன் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாகவும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளை சித்தரிப்பதாகவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெடிகுண்டு வைக்கும் கதாபாத்திரத்திற்கு இஸ்லாமிய தோற்றமும், அந்த நபரை ‘பாய்’ என அழைக்கும் வசனமும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ள ஸ்டேடஸில் ‘‘கசிந்திருக்கும் ஜனநாயகன் படக்காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா? இது தான் தங்களின் அரசியலா? எப்போது தான் மாறும் இந்த மனநிலை” எனக் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் இடம்பெற்றிருந்ததாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதைத்தொடர்ந்து ‘பீஸ்ட்’ படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தியிருந்ததற்கு கண்டனங்கள் எழுந்தன.

தற்போது விஜய் அரசியல் களத்திற்கு வந்துள்ள நிலையில்,’ஜனநாயகன்’ படத்திலும் அப்படியான காட்சி இடம்பெற்றிருப்பதாக கூறப்படுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் இந்த படத்திற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Tags : Vijay ,Chennai ,Pongal festival.… ,
× RELATED உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு