வரும் 2027-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3%-ஆக உயரும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. உள்நாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க வரி குறைப்பு காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் 7.6% ஆக இருந்த நிலையில், இதில் இருந்து 2026-ல் 6.9% ஆக குறைந்து, பின்னர் வரும் 2027-ல் 7.3% ஆக அதிகரிக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தனது சமீபத்திய ஆசிய வளர்ச்சி கண்ணோட்டம் (Asian Development Outlook) ஏப்ரல் 2026 அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நீடிக்கும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அதிகரிக்கும் எரிசக்தி விலைகள், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் போன்றவை கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் கணித்துள்ளது.
அதே போல உலகளாவிய அளவில் நீடிக்கும் பதற்றம் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலையை தொடர்ந்து அதிகரிக்க செய்ய கூடும், கப்பல் போக்குவரத்து வழித்தடங்களை சீர்குலைக்க கூடும். இதனால் உலகளவில் நிதி நிலைமைகள் தற்போது இருப்பதை விட மேலும் இறுக்கமாக்க கூடும் என்றும் இந்த அறிக்கை எச்சரித்து உள்ளது. வளர்ச்சியை தக்கவைத்து, பணவீக்க அபாயங்களைக் கட்டுப்படுத்த, அரசாங்கங்கள் சிறந்த பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் மற்றும் பாதிக்கப்பட கூடிய மக்களை அடையாளம் கண்டு உரிய ஆதரவை வழங்க வேண்டும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) தலைமைப் பொருளாதார நிபுணர் ஆல்பர்ட் பார்க் கூறி இருக்கிறார்.
அதே போல முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றான சீனாவின் வளர்ச்சி கடந்த ஆண்டு 5%-ஆக இருந்த நிலையில், 2026-ல் 4.6% ஆகவும், 2027-ல் 4.5% ஆகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சொத்துத் துறையில் தொடரும் நெருக்கடி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட மந்தநிலையை பிரதிபலிப்பதாக அறிக்கை கூறுகிறது. சில பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் கட்டுக்குள் இருந்தாலும், இந்தியாவில் பணவீக்கம் 2026-ல் 4.5 சதவீதமாகவும், 2027-ல் 4.0 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
