×

வீட்டு பத்திரத்தை தொலைத்த வங்கிக்கு ரூ.3 லட்சம் அபராதம்: நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

திருப்பூர், ஏப். 9: திருப்பூர், 15.வேலம்பாளையம், சொர்ணபுரி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர்கள் ரவிச்சந்திரன், சந்திரசேகரன். இவர்கள் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற்றிருந்தனர். இந்நிலையில், கடந்த 16.06.2025 அன்று அந்த கடனை முழுமையாக செலுத்தி அதற்கான சான்றிதழ் பெற்றனர்.

கடன் அடைப்பு சான்றிதழ் பெற்று 30 நாட்களுக்கு மேலாகியும் அசல் ஆவணங்களை வங்கி தரப்பிலிருந்து ரவிச்சந்திரனுக்கு கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ரவிச்சந்திரன் வங்கியை அணுகிய போது அசல் ஆவணங்கள் காணாமல் போனது தெரியவந்தது. தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நுகர்வோர் நீதிமன்ற தலைவர் தீபா, மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோரின் அமர்வில் அசல் ஆவணங்களை தொலைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக வங்கிக்கு ரூ.3 லட்சமும், வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரமும் ரவிச்சந்திரன், சந்திரசேகரன் ஆகியோருக்கு வழங்க வேண்டும். எனவும், அசல் ஆவணங்களின் நகல்களை விரைந்து பெற்று கொடுக்க வங்கிக்கு உத்தரவிட்டனர்.

 

Tags : Tiruppur ,Ravichandran ,Chandrasekaran ,Sornapuri Avenue ,Velampalayam, Tiruppur ,
× RELATED ரூ.91 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனை