×

சபரிமலை கோயில் விவகார தீர்ப்பில் நவீன சிந்தனையை திணிப்பது மத சுதந்திரத்தை பாதிக்கும்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தொடர்பான வழக்கானது இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”வழிபாட்டு முறை என்பது இன்றியமையாத மத நடைமுறையாக இருந்தால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது.

ஏனெனில் மதம் சார்ந்த முழுமையான புரிதல் நீதிமன்றங்களுக்கு இருக்காது. இதில் நீதிமன்றங்கள் தலையிட்டு கருத்துக்களை கூறுவது என்பது ஆபத்தானதாக போய் முடியும். அதிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருக்கக் கூடாது, தீண்டாமை காட்டப்படக்கூடாது போன்றவை எல்லாம் சட்டங்கள் மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது. மேலும் அரசியலமைப்பின் எந்த இடத்திலும் அத்தியாவசியமான மதநடைமுறைகளுக்கு மட்டுமே பாதுகாப்பு உண்டு என்று கூறப்படவில்லை.

அரசியல் சாசன சட்டம் பொதுவான மத நடைமுறைகள் ஆகும். சபரிமலை ஐயப்பன் போன்ற தெய்வங்களின் பண்புகள் அவற்றின் சட்டபூர்வ தன்மை அல்லது பகுத்தறிவு போன்றவற்றை மதச்சார்பற்ற முறையில் செயல்படும். அதனை இந்திய நீதிமன்றங்களால் ஆய்வு செய்ய முடியாது. அப்பாடி செய்ய அனுமதியும் வழங்கப்படவில்லை. ஆனால் இதற்கு மாறாக சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதித்த முந்தைய தீர்ப்பில் பக்தர்களின் உரிமைகள் குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை.

அதேப்போன்று திருமணத்திற்கு வெளியே தன்னிச்சையான பாலியல் உறவு வைத்திருப்பதை தனிமனித உரிமை என்று நீதிமன்றம் அங்கீகரித்து உள்ளது. ஆனால் அதனை சமூகம் ஏற்கவில்லை. எனவே அதனை தவறாக தான் கருதுகிறது.  திருமண உறவில் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை தனிப்பட்ட உரிமை என்று ஏற்க சமூகம் தயாராக இல்லை.

ஆனால் சமூகத்தின் விருப்பங்களுக்கு மாறாக தான் உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்தது. அதேப்போன்று தான் சபரிமலை விவகாரத்திலும் அரசியலமைப்பு நெறி என்ற கோட்பாடு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின் நம்பிக்கைகளுக்கும், நீண்ட கால நடைமுறைகளுக்கும் மதிப்பளிக்காமல் சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் குறிப்பிட்ட நவீன சிந்தனையை திணிப்பது மத சுதந்திரத்தை பாதிக்கும் என்று வாதிட்டார்.

Tags : Sabarimala temple ,Union ,Supreme Court ,New Delhi ,Sabarimala Ayyappa ,Chief Justice ,Suryakanth… ,
× RELATED கேரளா, அசாம், புதுச்சேரிக்கு இன்று...