பாலக்காடு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் நடிகர் ரமேஷ் பிஷாரடி, இடதுசாரி கூட்டணி வேட்பாளர் ரசாக் மற்றும் பாஜ கூட்டணி வேட்பாளர் ஷோபா சுரேந்திரன் ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தத் தொகுதியில் 3 பேருக்குமே சம வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாலக்காடு தொகுதிக்குட்பட்ட கண்ணாடி என்ற இடத்திற்கு அருகே தருவக்குறிச்சி பகுதியிலுள்ள ஒரு துக்க வீட்டுக்கு ஆறுதல் சொல்ல பாஜ வேட்பாளர் ஷோபா சுரேந்திரன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார்.
அப்போது பாஜவை சேர்ந்த ஒரு பெண் தொண்டர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மூதாட்டியிடம் ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்தார். இதை அங்கிருந்த சில காங்கிரஸ் தொண்டர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இதுகுறித்து அறிந்த ஷோபா சுரேந்திரன் வீடியோ எடுத்தவர்களை மிரட்டினார். பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த மூதாட்டியின் வீட்டில் சோதனை நடத்தினர். இதற்கிடையே தனக்கு மருந்து வாங்குவதற்காக பாஜ ரூ. 5 ஆயிரம் பணம் தந்ததாக அந்த மூதாட்டி முதலில் ஒப்புக்கொண்டார். ஆனால் பின்னர் பல்டியடித்த அவர், தன்னுடைய கையில் இருப்பது ஓய்வூதியமாக கிடைத்த பணம் என்று கூறினார். வாக்காளர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று பின்னர் ஷோபா சுரேந்திரனும் மறுத்தார்.
