அசாம் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது. ஆனால் வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, உதல்குரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான சுரேன் டைமாரி நேற்று கட்சியில் இருந்து விலகுவதாகவும், வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இது அசாம் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி வேட்பாளர் சுரேன் டைமாரி கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியில் நீடிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அது எனக்குத் துரோகம் இழைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சி ‘மியா’ சமூகத்தினருக்காக மட்டுமே செயல்படுகிறது;
ஆனால் என்னைப் போன்ற பழங்குடியினருக்காக அவர்கள் எதையும் செய்வதில்லை. தேர்தல் பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் கட்சி எனக்கு எந்தவிதமான ஆதரவையும் அளிக்கவில்லை. நான் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களைத் திரும்பத் திரும்பத் தொலைபேசியில் அழைத்தேன்; ஆனால் அவர்கள் எனது அழைப்பை ஏற்கக்கூட இல்லை. அவர்கள் எனக்குச் சிறிதும் உதவாததால் நான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன்.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டியும் எனக்கு உதவவில்லை. அதனால் தான் நான் இந்த முடிவை எடுத்தேன். நான் கட்சிக்குத் துரோகம் இழைக்கவில்லை; மாறாக, கட்சிதான் எனக்குத் துரோகம் இழைத்துள்ளது’ என்றார். டைமாரியின் இந்த அறிவிப்பால் ஏற்பட்ட சூழல் குறித்துப் பேசிய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி கூறுகையில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு முடிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால், வேட்பாளர்களின் பெயர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.
எனவே, தற்போது தேர்தல் களத்திலிருந்து ஒருவரின் பெயரை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்றார். இதற்கிடையே டைமாரி தனது முடிவை ஊடகங்கள் முன்னிலையில் அறிவித்திருந்தாலும், தனது ராஜினாமா கடிதத்தை இன்னும் கட்சிக்குச் சமர்ப்பிக்கவில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பேதபிரதா போரா தெரிவித்தார்.
