மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் நேற்று பவானிப்பூர் தொகுதியில் முதல்வர் மம்தா வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக காளிகாட் இல்லத்திலிருந்து ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். சுமார் 600 மீட்டர் தூரம் அவர் நடந்து சென்றார். அப்போது பெண் தொண்டர்கள் சங்கொலி எழுப்பியும், மங்கல ஒலி ழுப்பியும் உடன் வர, கட்சித் தொண்டர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கொடிகளை அசைத்து சென்றனர். மனு தாக்கல் செய்தபிறகு மம்தா கூறுகையில்,’ நான் இந்த பவானிப்பூரில்தான் பிறந்து வளர்ந்தேன்.
ஆண்டின் 365 நாட்களும் நான் இங்கேயேதான் வசிக்கிறேன். என் வாழ்க்கை, என் பணிகள், என் பயணங்கள் – அனைத்தும் பவானிப்பூரை சுற்றியே சுழல்கின்றன. என் வாழ்க்கையில் அனைத்தும் இங்கிருந்துதான் தொடங்கின. பவானிப்பூர் மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவிக்கிறேன். மேற்குவங்கம் முழுவதும் உள்ள வாக்காளர்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்.
பவானிப்பூரில் மட்டுமல்லாமல், மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து 294 தொகுதிகளிலும் போட்டியிடும் எங்கள் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யுமாறு நான் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நாங்கள் இன்னும் பெரிய மக்கள் ஆணையைப் பெற்று வெற்றி பெறுவோம். வாக்காளர் பட்டியலிலிருந்து 91 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
நான் உச்ச நீதிமன்றத்தை அணுகினேன்; அதன் விளைவாக, 1.2 கோடி பெயர்களில் 32 லட்சம் பெயர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தீர்ப்பிற்காகக் காத்திருக்கும் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களும் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். வாக்காளர் பட்டியல்கள் ஏன் முடக்கப்பட்டுள்ளன என்பது எனக்குப் புரியவில்லை. நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம், காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களில் 56 சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் ஆவர்’ என்றார்.
