பள்ளிபாளையம், ஏப்.9: கம்பத்திலிருந்த மீட்டர் இணைப்புக்கு வரும் மின்சாரத்தை துண்டித்து, ஒயர்களை திருடிச் சென்றதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள் இருளில் மூழ்கியது. பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையத்தில், களியனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இதன் அருகில், கிராம நிர்வாக அலுவலகம், சமுதாய கூடம், விபிஆர்சி அலுவலகம், அங்கன்வாடி மையம் ஆகியவை தனித்தனியான கட்டடத்தில் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, இந்த அலுவலகங்களை பூட்டிவிட்டு, அதன் நிர்வாகிகள் சென்றுவிட்டனர். காலையில் வந்து திறந்து பார்த்த போது அலுவலகங்களில் மின்சாரம் இல்லை. அருகில் உள்ள வீடுகளில் மின்சாரம் இருந்த நிலையில், அலுவலகங்களில் மட்டும் மின்சாரம் இல்லை.இதையடுத்து இணைப்பை பார்வையிட்ட போது, மின் கம்பத்திலிருந்து ஐந்து அலுவலக மீட்டருக்கு வரும் மின்சார ஒயர்களை துண்டித்து மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதில் செம்பு கம்பிகளை கொண்ட மின் ஒயர்கள் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், அலுமினிய கம்பிகளை கொண்ட ஒயர்கள் மட்டும் அங்கேயே துண்டிக்கப்பட்டு கிடந்தது. இதனால், நேற்று முழுவதும் மின்சாரம் இல்லாதால் கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவற்றில் பணி செய்ய முடியவில்லை. மின்சாரம் இல்லாத நிலையில், அரசு அலுவலகங்கள் இருளில் மூழ்கியது. இது குறித்து பிடிஓ மலர்விழி, பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
