ராசிபுரம், ஏப்.8: ராசிபுரத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில், தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் தலைமையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலமானது ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, ஆத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம், சேலம் சாலை, இறுதியாக பழைய பேருந்து நிலையம் வழியாக 100க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு வாக்குப்பதிவை வலியுறுத்தி கோஷமிட்டு சென்றனர். அப்போது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சாலையோர கடைக்காரர்களுக்கு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் சசிகுமார் ஆகியோர் வழங்கினர்.
