×

போதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மருத்துவர்

கெங்கவல்லி, ஏப்.9: கெங்கவல்லியில் மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்து 3 டூவீலர், பொக்லைன் மீது மோதிய மருத்துவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணத்தூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் நவநீதகிருஷ்ணன்(27), இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது பாட்டி கெங்கவல்லியில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக நவநீதகிருஷ்ணன் தனது காரில் வந்துள்ளார். அப்போது கெங்கவல்லி-தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வந்தபோது, கார் நிலைதடுமாறி நின்று கொண்டிருந்த 3 டூவீலர்கள், ஒரு பொக்லைன் மீது மோதியது. இதில் காரின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் குடிபோதையில் வந்த மருத்துவர் நவநீதிகிருஷ்ணன் காயமடைந்தார். அவரையும், விபத்தில் காயமடைந்த மற்றொரு வாலிபரையும், அப்பகுதி மக்கள் மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடுவலூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி, குடிபோதையில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டிய மருத்துவர் நவநீதகிருஷ்ணன் மீது, வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் விபத்து ஏற்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

Tags : Kengavalli ,Bokline ,Iswaran ,Nawneethakrishnan ,Namakkal district, Venanthur ,
× RELATED வீடுபுகுந்து திருட முயன்றவர் கைது