×

பெயர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைக்காலமாக வாக்களிக்க அனுமதிக்க முடியாது: மேற்கு வங்க விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அண்மையில் நடைபெற்றன. அப்போது முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, சுமார் 20 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இருப்பினும் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 20 லட்சம் பேரையும் இடைக்காலமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 20லட்சம் பேரை இடைக்காலமாக வாக்களிக்க அனுமதிக்க முடியாது. எனவே மேற்கு வங்க மாநில அரசின் கோரிக்கையை நிராகரிக்கிறோம். ஏனெனில் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை காக்க வேண்டியது அவசியம் ஆகும். அதாவது குளறுபடிகள் உள்ளவர்களை தற்காலிகமாக அனுமதிக்க முடியாது.

மேலும், தேர்தல் காலக்கெடுவுக்குள் தீர்ப்பாய நடைமுறைகளை அவசரகதியாக முடிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்.இருப்பினும், நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கான வாய்ப்பு முழுமையாக மறுக்கப்படவில்லை. இதற்காக தீர்ப்பாயங்கள் விரைந்து செயல்பட வேண்டும். இதில் வரும் 15ம் தேதிக்குள் மேல்முறையீட்டில் தேர்வாகும் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே, வரும் 18ம் தேதி வெளியிடப்படும் கூடுதல் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இதன் மூலம் அவர்கள் 23ம் தேதி நடக்கும் முதற்கட்டத் தேர்தலின் போது வாக்களிக்க முடியும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,West Bengal ,New Delhi ,
× RELATED சுங்கசாவடிகளில் 10ம் தேதி முதல் ரொக்க...