புதுடெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மீதியுள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என தெரிகிறது. பீகார், உபி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது.
அசாமில் மட்டும் வாக்காளர் பட்டியல் சிறப்பு மறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உபியை தவிர இதர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் இந்த மாதம் 29ம் தேதி வரை சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. அடுத்த மாதம் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்த உடன் மீதி உள்ள 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரேதசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என தெரிகிறது .வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான ஏற்பாடு பணிகளை தயார் செய்யுமாறு 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை தேர்தல் ஆணையம் ஏற்கனவே கேட்டு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
