- திருவனந்தபுரம்
- பினராயி விஜயன்
- தெலுங்கானா
- முதல் அமைச்சர்
- ரேவந்த் ரெட்டி
- மோடி
- தலைவன்
- பாராளுமன்ற
- ராகுல் காந்தி
- காங்கிரஸ்
- தேசிய ஜனாதிபதி
- மல்லிகார்ஜுன் கார்கே
- கர்நாடக
- துணை முதலமைச்சர்
- டி. கே. சிவகுமார்
- பிரியங்கா காந்தி
- கேரளா
திருவனந்தபுரம்: பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பிரியங்கா காந்தி உள்பட தேசிய தலைவர்களும் கேரளத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரேவந்த் ரெட்டிக்கும், பினராயி விஜயனுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரேவந்த் ரெட்டி திருவனந்தபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பினராயி விஜயனை கடுமையாக தாக்கிப் பேசினார்.
அவர் பேசும்போது, கேரளத்தில் கடந்த 10 வருடங்களாக எந்தத் தொழில் வளர்ச்சியும் இல்லை. இங்கு மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. நீ போ மோனே (மகனே) விஜயா, பை பை விஜயா என்று கூறினார். மோகன்லால் ஒரு படத்தில், ‘நீ போ மோனே தினேஷா’ என்று கூறுவார். இந்த டயலாக் கேரளாவில் மிகவும் பிரபலமானது. அந்த டயலாக்கைத் தான் ரேவந்த் ரெட்டி பிரசாரத்தின் போது பினராயி விஜயனை குறிப்பிட்டு மாற்றிப் பேசினார்.
நேற்று இதுகுறித்து பினராயி விஜயனிடம் நிருபர்கள் கேட்டபோது, ஒரு மாநிலத்தின் முதல்வர் அந்தப் பதவியின் தகுதிக்கு ஏற்ப மரியாதையாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். டேஷ்(-) மகனே அதற்கான பதில் விரைவில் வருகிறது என்று கூறினார். ரேவந்த் ரெட்டியை டேஷ் மகனே என்று கூறியதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ரேவந்த் ரெட்டிக்கு பினராயி விஜயன் எக்ஸ் தளத்தின் மூலம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பது: அன்புள்ள திரு. ரேவந்த் ரெட்டிக்கு, கடந்த 10 வருடங்களில் கேரளம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்குவது நல்லதல்ல. இடதுசாரி கூட்டணி அரசுக்கு கேரள மக்கள் மீதான பொறுப்புணர்ச்சி 5 வருடங்களுக்கு ஒருமுறை வருவது அல்ல. அது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.
எந்த ஆதாரமும் இல்லாமல் கேரள அரசின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது. இவ்வாறு பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.இதன் பிறகும் பினராயி விஜயன் மீதான தாக்குதலை ரேவந்த் ரெட்டி நிறுத்தவில்லை. நேற்று ஆலப்புழாவில் பிரசாரம் செய்தபோது, பினராயி விஜயன் திருவனந்தபுரத்தின் மோடி, பை பை விஜயன் என்று கூறினார்.
