புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீசை நிராகரித்தது ஏன் என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாரபட்சமாக நடந்து கொண்டது, தேர்தல் மோசடி குறித்த விசாரணையை வேண்டுமென்றே தடுத்தது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் சுமத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பாக பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மார்ச் மாதம் தரப்பட்டது.
இந்த நோட்டீசை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் இருவரும் நிராகரித்ததாக நாடாளுமன்ற செயலகம் நேற்று முன்தினம் தெரிவித்தது. இந்நிலையில், பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் நிராகரித்த மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது உத்தரவில் தந்த விளக்கங்கள் குறித்த தகவல்கள் நேற்று வெளியாகி உள்ளன.
அதில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ‘‘எதிர்க்கட்சிகள் சார்பில் தரப்பட்ட நோட்டீசில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் விவாதத்திற்கு பொருத்தமானவையாக இருந்தாலும், பதவி நீக்க நடவடிக்கைகளை தொடங்குவதற்கு தேவையான அரசியலமைப்பு வரம்பை எட்டவில்லை.
தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்வதற்கான முகாந்திரம் ஏற்படுத்தும் வகையிலான முறைகேடான நடத்தை என்பதை நிரூபிக்கத் தேவையான போதிய ஆதாரங்கள் அக்குற்றச்சாட்டுகளில் இல்லை என்றே கருதுகிறேன். சில குற்றச்சாட்டுகள் ஏற்கனவே தீர்க்கப்பட்ட அல்லது நீதிமன்ற ஆய்வில் உள்ள விவகாரங்கள் தொடர்பானவை’’ என 7 குற்றச்சாட்டுகளையும் தனித்தனியாக குறிப்பிட்டு அதை நிராகரிப்பதற்கான விளக்கத்தை தந்துள்ளார்.
