×

மணிப்பூரில் வீடு மீது குண்டு வீச்சு 2 குழந்தைகள் பரிதாப பலி: வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு

இம்பால்: மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் மொய்ராங் ட்ராங்லாபி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 5வயது சிறுவன் மற்றும்6 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் குழந்தைகளின் தாய் பலத்த காயமடைந்தர். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து அந்த பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு எண்ணெய் டேங்கர்கள் மற்றும் சரக்கு லாரியை அவர்கள் தீயிட்டு கொளுத்தினார்கள். மொய்ராங் காவல்நிலையத்தின் முன் டயர்களை எரித்து முழக்கமிட்டனர்.மேலும் தற்காலிக காவல் சாவடிகளையும் சேதப்படுத்தினார்கள். சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து முதல்வர் கேம்சந்த் சிங் கூறுகையில், இது மிருகத்தனமானது, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

* ஊரடங்கு உத்தரவு
மணிப்பூரின் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* உறுதியான நடவடிக்கை தேவை
பிஷ்ணுபூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் தனது எக்ஸ் தளத்தில்,\”பிரதமர் அவர்களே மணிப்பூர் வெறும் ஒரு மாநிலமல்ல. அது ஒரு பொறுப்பு. கடமைக்காக வெறும் அறிக்கை வெளியிடுவது மட்டும் போதாது. நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டை மீறிச் செல்வதற்கு முன்பாகவே நீங்கள் உறுதியான மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.

* 3 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை முடக்கம்
மணிப்பூர் மாநிலத்தில் குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தவுபால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய இடங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழலைக் கருத்தில் கொண்டும், தவறான தகவல்கள் மற்றும் பொய் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையிலும் இந்த ஐந்து மாவட்டங்களிலும் பிராட்பேண்ட், விஎஸ்ஏடி மற்றும் விபிஎன் சேவைகள் உள்ளிட்ட இணைய மற்றும் மொபைல் தரவு சேவைகளை மூன்று நாட்களுக்கு முடக்குவதற்கு முடிவு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Manipur ,Imphal ,Moirang Tranglabi ,Bishnupur district ,
× RELATED சுங்கசாவடிகளில் 10ம் தேதி முதல் ரொக்க...