×

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு

பெரம்பலூர்,ஏப்.8: பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் மனுத்தாக்கல் செய்த 23 பேர்களில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட 13 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் உள்பட 10 பேர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாளை (9ம்தேதி) இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30ஆம்தேதி தொடங்கி, கடந்த ஏப் 6ஆம்தேதி முடிவடைந்துள்ளது. வேட்பு மனுத்தாக்கலுக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல்நடத்தும் அலுவலரான, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா அலுவலகத்திலும், குன்னம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், குன்னம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் குன்னம் தாலுகா அலுவலகத்திலும் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பெரம்பலூர் தொகுதிக்கு 23 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனுக்கள் பரிசீலனை நேற்று பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் முடிவாக தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் அனிதா மூலம் வெளியிடப்பட்ட வேட்பாளர் வரிசை பட்டியலின்படி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களான பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் புது நடுவலூர் அறிவழகன், அதிமுக வேட்பாளர் எளம்பலூர் தமிழ்ச் செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரூர் சுகன்யா, திமுக வேட்பாளர் பெரம்பலூர் டாக்டர் ஜெயலட்சுமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் சிறுகுடல் தாமோதரன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அரணாரை சிவக்குமார் ஆகிய 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. சுயேட்சை வேட்பாளராக பொம்மனப்பாடி ஆனந்த ஜோதி, இலாடபுரம் கவிதா, வி.களத்தூர் சந்திர குமார், பெரம்பலூர் ஷியாமளா, வேப்பந்தட்டை குணசேகரன், பெருநிலா சுப்பிரமணியன், துறையூர் தாலுக்கா, சொரத்தூர் ஜெயச்சந்திரன் ஆகிய 7 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இதன்படி பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 23 பேர்களில் 13 பேர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 வேட்பு மனுக்களில் 3 பேர்களின் வேட்பு மனுக்கள் இருமுறை விண்ணப்பித்திருந்ததால் அதில் ஒன்று ஏற்கப்படும் பட்சத்தில் மற்றொன்று தானாகவே தள்ளுபடி ஆனது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுவதற்கு முன்பாக, தேர்தல் அதிகாரிகளால் கோரப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என கால அவகாசம் அளித்து முறையாக தேர்தல் நடத்தும் அலுவலரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் ஒப்படைக்காத வேட்பாளர்கள், வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யாத வேட்பாளர்கள் என 7 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் உள்பட 10 பேர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி சார்பாக வேட்பு மனுதாக்கல் செய்திருந்த பெரம்பலூர் வெங்கடேசன் அளித்திருந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது..

நாளை (9ஆம்தேதி) வேட்பு மனுக்கள் திரும்பப் பெறும் நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

2 மெஷின் தேவையில்லை
ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்கலாம். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனையின் முடிவில் 13 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாளை வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்ற பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் சிலர் வாபஸ் பெற்றாலும் மாற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்க தேவை இன்றி ஒரே இயந்திரத்திலேயே வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்ற விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Perambalur Assembly Constituency ,Perambalur ,Dimuka ,Adimuka ,Nadaka ,Davega ,Tamil Nadu Party ,
× RELATED திருவளக்குறிச்சி வாக்குச்சாவடி...