கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளருமான பிரேமலதா பேசியதாவது:
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழக மக்கள் விரும்பும் கூட்டணி. மக்கள் போற்றும் கூட்டணி. மாபெரும் வெற்றியை தர இருக்கும் கூட்டணி. அண்ணன் மு.க.ஸ்டாலினுக்காக கொளத்தூரில் பிரசாரம் செய்தபோது, விஜயபிரபாகரனுக்கு அவர் விருதுநகர் தொகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஆர, அமர யோசிச்சி பாரு, வரப்போகும் நாளை தலைமுறை சிந்திச்சு பாரு என மு.க.ஸ்டாலின் அந்த கூட்டத்தில் விஜயபிரபாகரனுக்காக பாடினார். கலைஞருக்கும், கேப்டன் விஜயகாந்த்துக்கும் 50 ஆண்டு காலம் நட்பு.
இப்போது, கலைஞரும், கேப்டனும் தெய்வமாக இருந்து ஆசிர்வதிப்பதால், இந்த கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த கூட்டணியை பார்க்கும்போது பொங்கல் விழாவை உதாரணமாக கூறலாம். பானையில் அரிசி போட்டு, கையில் சமையல் செய்து, முரசு கொட்டி, உதயசூரியனுக்கு பொங்கலை படைப்பது போல வெற்றியை கொண்டாடுவோம். மே 4ம் தேதி பெறபோகும் வெற்றி எடப்பாடியின் ஆணவத்துக்கு கிடைக்கும் விலையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
