×

சினிமா பாடலில் பெண்களை அவமதிக்கும் ஆபாசம்; தேசிய மகளிர் ஆணையம் முன் ஆஜராகாததால் நடிகைக்கு கண்டிப்பு: மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த திரைப்பட குழு

 

புதுடெல்லி: பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பாடல் தொடர்பாக நடிகர் மற்றும் படக்குழுவினர் நேரில் ஆஜராக தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ‘கேடி: தி டெவில்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சர்க்கே சுன்னர் தெரி’ என்ற பாடலில் நடிகை நோரா ஃபதேகி மற்றும் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் பாடல் வெளியான சில நாட்களிலேயே, அதில் இடம்பெற்ற வரிகள் மற்றும் நடன அசைவுகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்தப் பாடல் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம், அது தொடர்பான விசாரணையை நேற்று தொடங்கியது.

ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹத்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையில், பாடலாசிரியர் ரகிப் ஆலம், இயக்குனர் பிரேம் மற்றும் தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள் கவுதம், சுப்ரீத் ஆகியோர் ஆஜராகினர். விசாரணையின் போது விஜயா ரஹத்கர் கூறுகையில், ‘பாடலின் வரிகள் பெண்களின் கண்ணியத்திற்கு எதிராக இருப்பதற்கு எனது கவலையை தெரிவித்துக் கொள்கிறேன். பாடலின் அர்த்தம் தெரியாது என்ற குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதத்தை ஏற்க முடியாது. படைப்பாற்றல் என்ற பெயரில் பெண்களின் கண்ணியத்தை ஒருபோதும் காயப்படுத்த முடியாது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கிறேன்’ என்று கூறினார்.

இதையடுத்து, அங்கு ஆஜரானவர்கள் இந்த பாடல் சமுதாயத்தில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்டதுடன், மகளிர் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதத்தையும் வழங்கினர். மேலும், அடுத்த 3 மாதம் பெண்கள் முன்னேற்றத்திற்காக பணியாற்றி அதுகுறித்த அறிக்கையை ஆணையத்தில் சமர்ப்பிப்பதாக உறுதி அளித்தனர். இந்த வழக்கில் நடிகை நோரா ஃபதேகி தரப்பில் வக்கீல் ஆஜரானார். ஆனால் இதனை ஏற்க மறுத்த ஆணையம், அவர் நேரில் ஆஜராக கடைசி வாய்ப்பாக வரும் 27ம் தேதியை நிர்ணயித்துள்ளது. அதேபோல், தொழில்முறை காரணமாக வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிவித்த நடிகர் சஞ்சய் தத், நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Tags : National Women's Commission ,New Delhi ,Maharashtra ,Mumbai ,
× RELATED அடுத்த 48 மணி நேரத்திற்கு நீங்கள்...