×

தொழில் உற்பத்தியில் அசுர வளர்ச்சி.. தேசிய அளவில் முதலிடம் பிடித்து தமிழகம் சாதனை

திமுக ஆட்சியில் தமிழக தொழிற்சாலைகளில் ரூ.9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்து இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2024- 2025-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 2021-ஆம் ஆண்டிலே மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று கொண்ட பின், தொழிற்துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டன. இதுமட்டுமல்லாமல் முதலமைச்சரே நேரடியாக பல்வேறு நாடுகளுக்கும் சென்று அங்கிருக்கும் தொழில் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் துவக்க வருமாறு அழைப்பு விடுத்து, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திருந்தார்.

இந்த நிலையில் தான் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியிலே தமிழகமானது தொழில்துறையில் எவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பது தொடர்பாக மத்திய அரசினுடைய புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கின்றன. மாநில அரசு மேற்கோள் காட்டி இருக்கும் தகவல்களின்படி, கடந்த 5 ஆண்டுகளில் தொழில் முதலீட்டாளர்களோடு 1100-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக அரசு மேற்கொண்டு ரூ.12 லட்சத்து 16 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது.

இது மட்டுமல்லாமல் கடந்த 5 ஆண்டுகளில் 36 லட்சம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2024- 2025-ஆம் ஆண்டுக்கான தொழிற்உற்பத்தி மதிப்பீடு அறிக்கையில் தொழிற்சாலைகளில் ரூ.9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் உற்பத்தி செய்து இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் தொழில் உற்பத்தி 82.6% என்ற அளவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் ரூ.5.28 லட்சம் கோடியாக மட்டுமே இருந்த தொழிற்துறை உற்பத்தி மதிப்பு தற்போது ஒரு பெரிய உச்சத்தை எட்டி இருப்பது வெறும் எண்கள் அல்ல, இந்த சாதனைக்கு பின்னால் பலருடைய உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருக்கிறது என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி தொழிற்துறை உற்பத்தியில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே நாட்டில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 15.43% தமிழ்நாட்டில் உள்ளதாகவும் , சுமார் 16% வளர்ச்சியுடன், இந்தியாவின் மிக வேகமாக வளரும் சிறந்த மற்றும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளதாகவும் ரிஸர் வங்கியின் குறிப்பு கூறுகின்றது.

Tags : Tamil Nadu ,DMK ,Reserve Bank ,M.K. Stalin… ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...