சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை சமீப நாள்களில் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.
தங்கம் விலை நேற்று காலையில் பவுனுக்கு ரூ.1120 குறைந்து, மாலையில் ரூ.1440 உயர்ந்தது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கம் விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில சமயங்களில் அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று காலையில் குறைந்தது. அதாவது, நேற்று காலையில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,810க்கும், பவுனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10,480க்கும் விற்பனையானது.
இந்த மகிழ்ச்சியை நகை வாங்குபவர்கள் அனுபவிப்பதற்குள் மாலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,990க்கும், பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,920க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்று காலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255க்கும், பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையானது. ஆனால் மாலையில் வெள்ளி விலை உயர்ந்தது. மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,10,880க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.13,860க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.255க்கு விற்பனை ஆகிறது.
