×

ராமதாஸ் பின்வாங்கிய நிலையில் எடப்பாடியை எதிர்த்து சசிகலா கட்சி வேட்பாளர்

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அரசியலில் இருந்தே ஒழிப்பேன் என சபதமிட்டு, அஇபுதமமுக என்ற கட்சியை தொடங்கிய சசிகலா, கூட்டணிக்கு எந்த கட்சிகளும் சேராததால் ராமதாசுடன் கூட்டணி சேர்ந்தார். பாமகவை பறித்து கொண்ட மகன் அன்புமணிக்கு எதிராக அவரும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். சசிகலாவும், ராமதாசும் எதிரிகளை வீழ்த்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளரை ராமதாஸ் நிறுத்துவாரா? அல்லது சசிகலா நிறுத்துவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. மகனை கூட்டணியில் சேர்த்த எடப்பாடி மீது ராமதாஸ் கடும் கோபத்தில் இருந்தார். அத்தொகுதியில் பாமகவுக்கு கூடுதல் செல்வாக்கு இருக்கிறது. இதனால் ராமதாஸ் தான் வேட்பாளரை நிறுத்துவார் என கூறப்பட்டு வந்தது. இதனால் சசிகலா வேட்பாளரை நிறுத்தவில்லை.

இந்நிலையில் ராமதாஸ் கடைசிவரை வேட்பாளரை நிறத்தாமல் பின்வாங்கினார். இதையடுத்து கடைசி நேரத்தில் சசிகலா, எடப்பாடியை சேர்ந்த சுரேஷ் என்பவரை களத்தில் இறக்கினார். இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து சசிகலா என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். இத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டுவோம்’’ என்றார்.
இடைப்பாடி தொகுதியில் பாமகவுக்கு செல்வாக்கு இருக்கிறது. பாமக இரண்டாக உடைந்த நிலையில் ராமதாஸ் தரப்பினருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கும். ஆனால் ராமதாஸ் தரப்பில் வேட்பாளரை நிறுத்த விடாமல் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தினார். அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். ஆரம்பம் முதலே சசிகலா இதனை கண்காணித்து வந்து கடைசி நேரத்தில் தனது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார் என எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

 

Tags : Sasikala ,Edappadi ,Ramadoss ,AIADMK ,general secretary ,Edappadi Palaniswami ,Anbumani ,PMK ,
× RELATED மேற்குவங்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை...