×

தந்தை, மகன் படுகொலை எடப்பாடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலையை மறைத்து, குற்றவாளிகளுக்கு துணை போன எடப்பாடி பழனிசாமி மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறையினரும் குற்றவாளிகளே என மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அனைவருக்கும் இரட்டை மரண தண்டனையும், அபராதமும் விதித்திருப்பதன் மூலம் நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் வழங்கியிருக்கிற தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இத்தகைய கொடூரமான சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்ததை நீதிபதி தமது தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமியின் முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறார். எனவே, சாத்தான்குளம் படுகொலையை மறைத்து குற்றவாளிகளுக்கு துணை போன எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவல் நிலைய கொலை வழக்கில், குற்றத்தின் கொடூரத்தை நீதிமன்றம் அங்கீகரித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த கொலையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீதிபதி குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் மரண தண்டனை வழங்கியிருக்கிறார். மனித உரிமைகளை அலட்சியப்படுத்தி, சட்டநடைமுறையைப் புறந்தள்ளி விசாரணை என்ற பெயரில் கொடுமையான முறையில் நடந்து கொள்ளும் காவலர்களுக்கு இத்தண்டனை ஒரு எச்சரிக்கையாக அமையும். தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்கள் நடைபெறுவது தொடர்கதையாக இருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Selvapperundhagai ,Edappadi ,Chennai ,Edappadi Palaniswami ,Satankulam ,Tamil Nadu ,Congress ,Satankulam… ,
× RELATED என்.ஆர்.காங்.-பாஜக கூட்டணியை...